Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை:  ‘சிம்கார்டு ஸ்வீப்பிங்’ உங்கள் சிம் வேறு ஒருவரிடம் இருக்கலாம் உஷார்!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

digital-cheating-part-4

 

இந்தியாவின் தலைநகரான டெல்லியின் தெற்கில் இயங்குகிறது பிரபலமான செக்யூரிட்டி கம்பெனி. டெல்லியில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை பலவற்றுக்கும் இந்நிறுவனம் செக்யூரிட்டி சர்வீஸ்க்கு ஆட்களை அனுப்பியுள்ளது. அந்த செக்யூரிட்டி கம்பெனியின் நிர்வாக இயங்குநர், 2022 அக்டோபர் 10 ஆம் தேதி மாலை ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சியில் இருந்தபோது இரவு 7 மணி முதல் 8.30 வரை தொடர்ச்சியாக ஃபோன் கால் வந்துகொண்டு இருந்துள்ளது.

 

ஒரு முறை அவர் அந்த போன் காலை எடுத்த பேசியபோது எதிர் தரப்பிலிருந்து பேசிய பெண், “சார், நான் பேங்க் எக்ஸாம் எழுதப்போறேன், அதுக்காக அப்ளே செய்திருக்கேன். அப்போ என் செல்நம்பர் டைப் செய்யும்போது சில நம்பர் மாத்தி டைப் செய்துட்டாங்க. அந்த நம்பர் உங்க மொபைல் நம்பர் சார். இப்போ என்னால ஹால் டிக்கட் டவுன்லோட் செய்ய முடியல. இங்கு பதிவாகியிருக்கற மொபைல் எண்ணுக்கு தான் ஓ.டி.பி. வருமாம். அது இருந்தால்தான் உள்ளே போகமுடியும். ஹால் டிக்கட் டவுன்லோட் செய்ய முடியும், ப்ளீஸ் சார்” என்று சொல்லியிருக்கிறார். 

 

“அதுக்கு நான் என்ன செய்யட்டும்? அந்த சைட்ல செல்நம்பரை மாத்திக்குங்க?”
“அதை செய்ய முடியல சார், அதுக்கும் ஓடிபி கேட்குது சார்”
“உங்க மொபைலுக்கு வரும் ஓ.டி.பி.யை மட்டும் சொல்லுங்க சார்”
“சரிம்மா லாகின் பண்ணுங்க சொல்றன்”

 

அடுத்தடுத்து அவரது மொபைலுக்கு தெரியாத எண்களில் இருந்து தொடர்ந்து போன்கால்ஸ் வந்துள்ளது. சிலவற்றை அட்டன்ட் செய்ய பேங்க் கிரிடிட் கார்டு வேணுமா?, லோன் வேணுமா எனக் கேட்க கடுப்பாகியுள்ளார். ஹால் டிக்கட் ஓ.டி.பி. கேட்ட பெண்ணின் நம்பரிலிருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துள்ளது. கடுப்பில் இருந்தவர், தனக்கு வந்த மெசெஜ்ஜை படிக்காமல், ஓ.டி.பி.யை மட்டும் பார்த்து சொல்லியுள்ளார். அந்த பெண் குரல், “தேங்க்ஸ் சார்” எனச் சொல்ல இவரும் சரியென கட் செய்துள்ளனர்.

 

கொஞ்ச நேரத்தில் மீண்டும் அதே பெண் போன் செய்துள்ளார், “சார், நீங்க பார்த்து சொல்றதுக்குள்ள டைம் முடிஞ்சிடுச்சி ஓ.டி.பி. ஒர்க் ஆகவில்லை. மீண்டும் லாக் ஆயிடுச்சு. ஓ.டி.பி. திரும்ப வந்திருக்கும் பார்த்து சொல்லங்க சார். ப்ளீஸ் சார் என் வாழ்க்கையே உங்ககிட்டதான் இருக்கு” என்று சொல்ல, “சரிம்மா இரு” என மீண்டும் மெசேஜ் படிக்காமல் ஓ.டி.பி.யை மட்டும் பார்த்து சொல்லிவிட்டு கால் கட் செய்துவிட்டு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். 

 

மீண்டும் போன்கால் வந்துள்ளது, அட்டன்ட் செய்தவரிடம், “நீங்க ரன்பீர் கபூர்தானே, நான் உங்க ஃபேன் சார், உங்க நம்பரை வாங்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்” என்றது ஒரு குரல். ராங் நம்பர் எனச் சொல்லி லைனை கட் செய்துள்ளார். மீண்டும் அந்த பெண்ணிடமிருந்து போன் வந்துள்ளது. “என்னம்மா திரும்ப திரும்ப போன் செய்யற?”, “தேங்ஸ் சொல்ல கூப்பிட்டன் சார். இனிமே உங்களை தொந்தரவு செய்யமாட்டேன். ஹால் டிக்கட் டவுன்லோட் செய்துகிட்டேன். வெப்சைட்ல தவறா பதிவாகியிருந்த உங்க நம்பருக்கு பதில் என் நம்பரை மாத்திட்டேன். கன்பர்மேஷனுக்கு ஒரு ஓ.டி.பி. வந்திருக்கும். அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்க சார், அதுக்கப்பறம் உங்களுக்கு ஃபோன் செய்யவே மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். 

 

அவரும் மனதில் கடுப்புடன், ஒரு பங்ஷனுக்கு வந்தவனை நிம்மதியா இருக்க விடறாங்களா பாரு என சலித்துக்கொண்டே மெசேஜ் பாக்ஸ் ஓப்பன் செய்து ஓ.டி.பி.யை மட்டும் பார்த்து சொன்னதும், எதிர் முனையில் பேசிய பெண் தேங்ஸ் எனச் சொல்லிவிட்டு கட் செய்தார்.

 

அதன்பின்பு மொபைலை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு பார்ட்டியை என்ஜாய் செய்யத் துவங்கினார். இரவெல்லாம் பார்ட்டியில் கலந்துகொண்டவர் வீட்டுக்கு போய் படுத்துறங்கி காலை அலுவலகத்துக்கு வந்துள்ளார். அக்கவுண்ட்ஸ் ஆபிஸர் வந்து, “சார், நேத்து நைட் மணி ட்ரான்ஸ்பர் செய்திருக்கிங்க, அது என்ன கணக்கு சார்” எனக் கேட்க அதிர்ச்சியானவர், “நான் நேற்று ஒரு ஃபங்ஷன்ல இருந்தேன், எந்த ட்ரான்ஷக்சனும் பண்ணலயே” என்றுள்ளார். அக்கவுண்டன்ட் தன்னிடமிருந்த தகவலைக் காட்டியுள்ளார். கம்பெனியின் நடப்பு கணக்கிலிருந்து 50 லட்ச ரூபாய் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டிருந்தது. ஆர்.டி.ஜி.எஸ் வழியாக மற்றொரு வங்கியில் உள்ள பாஸ்கர் மண்டல் என்பவரின் வங்கி கணக்குக்கு  12 லட்ச ரூபாயும், அவ்ஜித்கிரி என்பவரின் வங்கி கணக்குக்கு 4.6 லட்சம் என 4 வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

 

எப்படி ஓ.டி.பி. வராமல் மாற்றப்பட்டது என அதிர்ச்சியானவர், தனது ஆப்பிள் ஐ-போனை எடுத்து பார்த்தபோது, இரவு வங்கியிலிருந்து ஆர்டிஜிஎஸ் ட்ரான்ஸ்பருக்கு ஓ.டி.பி. வந்துள்ளது அவருக்கு தெரியவந்தது. ஹால் டிக்கட் ஓ.டி.பி. எனச் சொல்லி பணம் அபேஸ் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியாகிவிட்டார். இது வெளியே தெரிந்தால் கம்பெனியின் இமேஜ் பாதிக்கப்படும் என பயந்தார். போனது 50 லட்சம் என்பதால் நிறுவனம் சார்பில் காவல் நிலையத்துக்கு புகார் அனுப்பினார். டெல்லி போலிஸ் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சுமன்நல்வா தான் இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ அலிகஞ்சில் உள்ள சந்த் கார்டனை சேர்ந்தவர் திவ்யான்ஷ் சிங். இவரது குடும்பம் வசதியானது. இவருக்கு இரண்டு சகோதரர்கள். தனித்தனியாக எல்லோர் பெயரிலும் வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த 2022 ஜுன் மாதம் லக்னோ சைபர் செல் பிரிவின் எஸ்.பி திரிவேணி சிங்கை சந்தித்து மே 31 ஆம் தேதி எனது வங்கி கணக்கு, எனது அப்பாவின் வங்கி கணக்கு, என் சகோதரரின் வங்கி கணக்குகளில் இருந்து 16.5 லட்சம் ரூபாயை வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்கள் என புகார் தெரிவித்தார். புகாரை வாங்கியவர்கள் இது எப்படி நடந்திருக்கும் என ஆலோசனை நடத்தினார்கள்.

 

வங்கி லாகின் ஐ.டி., பாஸ்வேர்ட் என எல்லாமே சரியாக இருந்தது. பின் எப்படி பணம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டது என ஆராய்ந்தார்கள். மொபைல் வழியாக வங்கி கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. அதுவும் லக்னோவிலேயே லாக்இன் செய்யப்பட்டிருந்தது. இறுதியில் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தினால், எடுத்தால் வங்கி குறித்த தகவல்களை அனுப்பவும், மொபைல் பேங்க், ஆன்லைன் பேங்க் வசதிக்காக ஒரு மொபைல் நம்பரை வாங்குவார்கள். திவ்யான்ஷ் சிங் வங்கியில் தந்திருந்த நம்பருக்கு பதில் வேறு ஒரு நம்பர் பதிவாகியிருந்தது. இது குறித்து வங்கியில் கேட்டபோது, மொபைல் எண் தொலைந்துவிட்டது, புது எண்ணை பதிவு செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டதால் புது எண்ணை இணைத்தோம் என பதில் சொல்லியதாக போலிஸாரிடம் கூறியுள்ளார்.

 

என்னுடைய கோரிக்கை கடிதம் இல்லாமல் எப்படி மாற்றினீர்கள் என வங்கி அதிகாரிகளிடம் கோபமாக கேட்டேன் என்றுள்ளார் திய்வான்ஷ். அதற்கு வங்கி அதிகாரிகள் சொன்ன பதிலை காவல்துறை அதிகாரிகளிடம் திய்வான்ஷ் சொன்னதும், விசாரணை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நீங்க ஆன்லைன்ல புகார் பதிவு செய்து இ-எப்.ஐ.ஆர் தந்திருக்கிங்களே என வங்கி மேலாளர் அதன் நகல்களை எடுத்துக்காட்டியதும் திய்வான்ஷ் அதிர்ச்சியாகிவிட்டார். அப்படியொரு புகாரை நான் போலிஸுக்கு அனுப்பவேயில்லையே என்றார் திய்வான்ஷ்.

 

அதாவது சர்டிபிகெட் காணாமல் போய்விட்டது, செல்போன் திருடு போய்விட்டது, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போட் போன்றவை தொலைந்துவிட்டால் காவல்நிலையம் வரத் தேவையில்லை. வீட்டில் இருந்தே ஆன்லைன் வழியாக புகார் அனுப்ப உ.பி காவல்துறை வெப்சைட் முகவரி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்வழியாக பலதரப்பட்ட புகார்களை வாங்கி விசாரணை நடத்துகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை உள்ளது. அதனைத்தான் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

 

உத்தரப்பிரதேச காவல்துறை இணையத்தில் என்னுடைய மொபைல் காணாமல் போய்விட்டது, புது சிம் வாங்க வேண்டும் எனச்சொல்லி புகார் அனுப்பியுள்ளார். அதில் தனது ஆதார் கார்டை பதிவிட்டுள்ளார். போலிஸாரும் ஆன்லைனில் வந்துள்ள புகாரை பார்த்துவிட்டு ஒருவாரம் கடந்து மிஸ்ஸிங் சர்டிபிகெட் அனுப்பியுள்ளனர். அதனை டவுன்லோட் செய்து அந்த சர்டிபிகெட்டை வங்கியில் தந்து தனது புது சிம் நம்பரை வங்கி கணக்கில் இணைத்துள்ளனர். புதிய எண் இணைத்துக் கொண்டபின் ஆன்லைன் வங்கி கணக்கு புது எண்ணுக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். அதன்வழியாக நெட் பேங்கிங்கை லாகின் செய்து வங்கி கணக்குக்குள் நுழைந்து பணத்தினை வேறு வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டனர்.

 

வங்கி கணக்கு எண் எப்படி கிடைத்தது? புது சிம் கார்டு எப்படி கிடைத்தது? என விசாரிக்கையில் வங்கி ஊழியர், கொல்கத்தா மஹாநகர் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு ஊழியர்கள் இந்த மோசடி கும்பலுக்கு உதவியதை காவல்துறை கண்டறிந்தது. 

 

இப்படி அடுத்தடுத்து பல புகார்கள் வந்த பின்பே இது சிம்கார்டு ஸ்வீப்பிங் என்பதை கண்டறிந்தனர். 

 

சிம்கார்டு ஸ்வீப்பிங்..?

 

மொபைலில் ஒருவரை தொடர்புகொண்டு உங்கள் கார்டு மேல இருக்கற நம்பரை சொல்லி வாங்குவதை விட சிம்கார்டு தொலைந்துவிட்டது என சர்வீஸ் தரும் ஏஜென்சியில் புது சிம் வாங்குவது சுலபம் அல்லது அதே சிம் கார்டு போல் மற்றொரு சிம் உருவாக்குவது அதைவிட சுலபம். மற்றொரு சிம் உருவாக்குவது என்பது குளோனிங் சிம் எனச் சொல்லப்படுகிறது. அதாவது உங்களிடம் உள்ள சிம்கார்டுக்கு குளோனிங் சிம்கார்டு உருவாக்கி வைத்துக்கொண்டால் ஒரிஜினல் சிம்கார்டுக்கு வரும் அழைப்புகள், மெசேஜ்கள் குளோனிங் சிம்கார்டுக்கும் வரும். இப்படி சிம் ஸ்வீப்பிங் மூலமாக கொள்ளையடிக்கிறார்கள் என்பதை சைபர் செல் போலிஸார் கண்டறிந்தனர். இது குறித்து உடனே அனைத்து மாநில சைபர் செல் போலிஸாருக்கும் எச்சரிக்கை மெயில் அனுப்பினர்.

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை தொடரும்…

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை:  ‘கார்டு மேல இருக்கற நம்பரை சொல்லுங்கோ’ பகுதி – 03