ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இரண்டாவது முறையாக மோதிய சூப்பர் 4 சுற்றில் 2வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 5 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் 28 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
பின் களமிறங்கிய கோலி ஆட்டத்தை தன் போக்கில் கொண்டு சென்றார். ஒரு புறம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் சரிந்தாலும் கோலி ரன்களை குவித்த வண்ணமே இருந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் சார்பில் ஷதாப் கான் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முகம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் தடுமாறி ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தனர். பாபர் ஆசம் 14 ரன்களிலும் பாக்கர் சமான் 15 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். பின் களமிறங்கிய முஹம்மது நவாஸ் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினார். இவர் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
ஒரு புறம் விக்கெட்கள் விழுந்தாலும் முஹம்மது ரிஸ்வான் ரன்களை சேர்த்த வண்ணமே இருந்தார். இவர் 51 பந்துகளில் 71 ரன்களை சேர்த்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் புவனேஸ்வர் குமார் அந்த ஒவரில் மட்டும் 19 ரன்களை விட்டுக்கொடுத்தது அதிர்ச்சியை அளித்தது. இதற்கிடையே இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் ஒரு பீல்டரை உள்வட்டத்துக்குள் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட பொழுது முதல் மூன்று பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் 4வது பந்தில் ஆசிப் அலி அவுட்டானார்.
ஐந்தாவது பந்தில் அஹமத் ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆட்டநாயகன் விருதை முஹம்மத் நவாஸ் பெற்றார். நேற்று 18 வது ஓவரில் இந்திய அணியின் அர்ஷிதீப் சிங் ஆசிப் அலியின் கேட்சை தவற விடாமல் இருந்திருந்தால் ஒரு வேலை இந்திய அணியின் வெற்றி சாத்தியப்பட்டிருக்கும். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் 12 முறை மோதி இந்தியா 8 முறையும் பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.