சர்வதேச கிரிக்கெட் வாரியம், ஒரு ஆண்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம், மாதந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களைப் பாராட்டும் வகையில், மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ஜனவரி மாதத்திலிருந்து வழங்கி வருகிறது.
ஜனவரி மாதத்திற்கான விருதை இந்திய அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் வென்றார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றக் காரணமாய் விளங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்கான விருதை அஸ்வின் கைப்பற்றினர். இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்டதற்காக இந்த விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதிற்கு இந்திய வீரர் புவனேஸ்வர் குமாரை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. புவனேஸ்வர் குமார், இங்கிலாந்திற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும், ஐந்து இருபது ஓவர் போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 4.65 என்ற எக்கனாமியுடன் பந்து வீசியுள்ள அவர், இருபது ஓவர் போட்டிகளில் 6.38 எக்கனாமியில் பந்து வீசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.