Skip to main content

‘சொதப்பலில் முடிந்த நல்ல தொடக்கம்!’- பெங்களூரு தோல்வி குறித்து விட்டோரி

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய டி20 கிரிக்கெட் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே, சேஷிங் செய்யும் அணியே வெற்றிபெற்று வரும் நிலையில், நேற்றும் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. 

 

rohit

 

ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யக்குமார் யாதவ்வை பவுல்ட் ஆக்கினார் உமேஷ் யாதவ். அடுத்த பந்திலேயே இளம் வீரர் இஷான் கிஷன் விக்கெட்டையும் வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார். ஆனால், இந்த மிகப்பெரிய தொடக்கத்தை பெங்களூரு வீரர்கள் சரியாக பயன்படுத்தவில்லை. ரோகித் 94 ரன்கள் மற்றும் எவின் லூவிஸ் 65 ரன்களும் என விளாச, இதன் விளைவாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வலுவான இலக்கை நிர்ணயம் செய்தது. 

 

இரண்டாவதாக களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், குவிண்டன் டீக்காக் விக்கெட்டைத் தொடர்ந்து சரமாரியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மிகமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருபுறம் கேப்டன் கோலியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தாலும், அவருக்கு ஆதரவாக ஒரு வீரர் கூட களத்தில் நீடிக்காததால், பெங்களூரு அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பெங்களூரு அணியின் கேப்டன் கோலி அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்திருந்தார்.  இதன்மூலம், ஹாட்ரிக் தோல்வியைத் தழுவிய மும்பை அணி, இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

 

vettori

 

இந்தத் தோல்விகுறித்து பேசியுள்ள பெங்களூரு அணியின் பயிற்சியாளர் டேனியல் விட்டோரி, ‘முதல் ஓவரிலேயே இரண்டு முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், முடிவை நாங்கள் அவ்வளவு அபாரமாக செய்துகாட்டவில்லை. திட்டமிடதிலிலும், வியூகங்களை வகுப்பதிலும் நன்றாக சொதப்பிவிட்டோம். மும்பை அணியின் ஸ்பின்னர்கள் மிகச்சிறப்பாக ஆடினார்கள். கோலியின் நிதானமான ஆட்டத்திற்கு துணையாக ஒருவர் கூட நிற்காதது துரதிஷ்டவசமானது. நாங்கள் நன்றாக சொதப்பிவிட்டோம்’ என பேசியுள்ளார்.