
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மறக்கமுடியாத சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, கடந்த 1919 ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அருகில் ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
அப்போது பஞ்சாப் லெப்டினேண்ட்டாக இருந்த ஜெனரல் மைக்கேல் ஓ டயர் தலைமையிலான பிரிட்டிஷ் படைகள், மைதானத்தை சுற்றி நின்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 1,500க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்திய சுதந்திரமடைந்த பிறகு, இந்த படுகொலையை நினைவு கூறும் வகையில், ஜாலியன் வாலாபாக்கில் நினைவிடம் எழுப்பப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து 106 ஆண்டுகளுக்குப் பிறகு, இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் எம்.பி பாப் பிளாக்மேன், பிரிட்டிஷ் காலனித்துவ ஒடுக்குமுறை குறித்தும், அரசு செய்த அட்டூழியங்கள் குறித்தும் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி பாப் பிளாக்மேன் பேசியதாவது, “எப்ரல் 13, 1919 அன்று ஜெனரல் டையரின் கட்டளையின் கீழ் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். அந்த நாள், பிரிட்டிஷ் வரலாற்றில் ஒரு கறை. ஜாலியன் வாலாபாக்கில் ஒவ்வொரு குடும்பங்களும் அந்த நாளை அனுபவிக்க வெயிலில் அமைதியாகக் கூடியிருந்தனர். ஆனால், பிரிட்டிஷ் படைகளுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் டயர், தனது படைகளை அந்த பகுதிக்குள் அணிவகுத்து சென்று அவர்களின் தோட்டாக்கள் தீர்ந்து போகும் வரை கூட்டத்தினரை நோக்கி சுடுமாறு கட்டளையிட்டார். இந்த படுகொலையின் முடிவில், 1,500 பேர் உயிரிழந்தனர். 1,200 பேர் காயமடைந்தனர்.
இறுதியில், ஜெனரல் டயரின் கொடூரத்தின் மூலம், பிரிட்டிஷ் காலனித்துவ வரலாற்றில் இது ஒரு வெட்கக்கேடான அடையாளமாக அமைந்துவிட்டது. 2019 ஆம் ஆண்டில், தெரசா மே இதை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் இருண்ட அத்தியாயமாக ஜாலியன் வாலாபாக் படுகொலையை அங்கீகரித்தார். இருப்பினும், முறையான மன்னிப்பு எதுவும் கேட்கப்படவில்லை. இந்த நிகழ்வின் ஆண்டு நிறைவு, இந்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வருகிறது. அப்போது, நாடாளுமன்றம் விடுமுறையில் இருக்கும். அதனால், தவறை ஒப்புக்கொண்டு இந்திய மக்களிடம் முறையாக மன்னிப்பு கேட்டு அரசாங்கம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட முடியுமா?.” என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பான விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசுப்பொருளாகி வருகிறது.