
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்டவை இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தன. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டது.
மொத்தம் 17 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இறுதியாக 1,17,158 வாக்குகள் பெற்று சந்திரகுமார் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதனையடுத்து சந்திரகுமாருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பணியாற்றிய திமுகவினருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று (30.03.2025) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “வரலாறு காணாத வெற்றியையும் பார்த்து இருக்கிறோம். மிக மோசமான தோல்வியையும் சந்தித்து இருக்கிறோம். பெற்ற வெற்றிகளால் நாம் தலைக் கனம் கொண்டதும் இல்லை. அடைந்த தோல்விகளால் சோர்வடைந்து முடங்கியதும் இல்லை. ஒவ்வொரு முறையும் எழுச்சி பெற்று முன்பை விட வீரியமாக திமுக செயல்படுவதற்கு அடிப்படையாக இருப்பது திமுக தொண்டர்கள் தான். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மாபெரும் வெற்றியை தேடித்தந்து, தமிழ் மண்ணில் பிற்போக்கு தனங்களையும் வெறுப்பையும் பேசக்கூடிய மக்கள் விரோத சக்திகளுக்கும் அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என்று நிரூபித்துள்ளோம்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் என்பது திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்யப்போகிற நேரத்தில் வந்த இடைத்தேர்தல் ஆகும். நம் ஆட்சியை பற்றி மக்களின் மதிப்பீடாக கருதப்பட்ட முக்கியமான தேர்தல். அதில் பெருவெற்றியை பெற்றுத் தந்துள்ள தொண்டர்களுக்கு நன்றி சொல்ல தான் இந்த நிகழ்ச்சி. இதன் மூலம் நான் உங்களிடம் கேட்டுகொள்ள விரும்புவது இன்னும் ஒர் ஆண்டில் பொதுத்தேர்தலை சந்திக்க உள்ளோம். பொதுத்தேர்தல் களத்தில் நம்முடைய எதிர்க்கட்சிகள் எல்லாம் நம்மிடம் இருந்து வெற்றியைப் பறிக்க தரம் தாழ்ந்து பேசுவார்கள். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும் தான்.

அதனால் பல்வேறு கோணங்களில் பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள். நாடகங்கள் நடத்துவார்கள். இதுபோன்ற நாடகங்களை 75 ஆண்டுகளாக ஏன் அதற்கும் முன்னதாகவே இருந்து பார்த்து கொண்டு வருகிறோம். அதனால் எங்கே என்ன திட்டங்கள் போட்டாலும் அதனை முறியடிக்கிற வலிமை திமுகவிடம் உள்ளது. அந்த வலிமை தான் திமுக தொண்டர்கள். உங்களை போன்று உழைக்கிற கோடிக்கணக்கான தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கிறார்கள். என்னை பொறுத்தவரையிலும் கொள்கை, உழைப்பு, சாதனை ஆகியவற்றை நம்புகிறவன் நான். அதற்கு நேர்மையாகவும், தடம் மாறாமலும் இருப்பதால் தான் மக்கள் நம் உடன் இருக்கிறார்கள். அந்த மக்களை காக்க, தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து முன்னேற்ற 2026இல் களம் காண்போம். உங்கள் உழைப்பை கொடுங்கள். வரலாறு காணாத வெற்றியை காண்போம்” என் பேசியுள்ளார்.