Skip to main content

யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு! - சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் உருக்கம்!

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

அமெரிக்காவின் சான் புரூனோவில் உள்ளது யூடியூப் தலைமைச் செயலகம். இங்கு நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர், அங்கிருந்த ஊழியர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; நால்வர் படுகாயமடைந்தனர். 

 

San

 

மிகக் கொடூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்தப்பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கூகுள் பணியாளர்கள் மற்றும் பொது சமூகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு குறித்து கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கூகுள் பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

 

அதில், ‘சான் புரூனோவில் உள்ள நமது யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நம் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு பாதுகாப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போது எல்லோரும் பாதுகாப்பாக உள்ளதாக ஆறுதலான தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையின் மோசமான இந்த வெறியாட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டு, நால்வர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கவேண்டும். நீங்கள் எல்லாம் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்திருக்க மாட்டீர்கள் என்பதை அறிவேன். இனிவரும் நாட்களில் கூகுள் குடும்பம் இந்த மோசமான தாக்குதலில் இருந்து வெளிவருவதற்கான வேலைகளில் ஈடுபடுவோம்’ என உருக்கமாக எழுதியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காரை இயக்கியது எப்படி? - டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை நோட்டீஸ்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Police notice to TTF Vasan

விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதாகச் சர்ச்சைக்குரிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுப் பல நாட்கள் சிறைத் தண்டனைக்குப் பிறகு டிடிஎஃப் வாசன் வெளியே வந்திருந்தார். டிடிஎஃப் வாசன் பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காமல் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என நிபந்தனையோடு ஜாமீன் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் டிடிஎஃப் வாசன் காரில் சென்றார். அப்பொழுது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதை யூடியூப் சேனலில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மணி பாரதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து மீண்டும் அவரை கைது செய்தனர்.

சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனை மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டிடிஎஃப் வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்கவும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். மேலும் தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட நற்பணிகளை செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்டு அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி,  காவல் நிலையத்திற்கு நேரில் வந்து டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுப்பட்டதாக டிடிஎஃப் வாசனுக்கு காவல்துறை  நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில், 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் காரை இயக்கியது எப்படி? என கேள்வில் எழுப்பியுள்ள காவல்துறை இது குறித்து நாளை(3.6.2024) ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Next Story

தற்கொலைக்கு முயன்ற பெண்; யூடியூப் தொகுப்பாளினி உள்ளிட்ட மூவர் கைது

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
n

மக்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஆபாசத்தைத் திணித்து அதன் மூலம் பணம் ஈட்ட நினைக்கும் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த மூன்று பேரின் கைது.

யூடியூப்  என்ற ஒன்று அதிகம் அறியப்படாத ஆரம்ப காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த மக்களின் விமர்சனங்களைப் பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் தியேட்டர் வாசலை நோக்கி படையெடுக்கும். வெளியான திரைப்படம் குறித்து ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர். இப்படி இருந்த நிலையில் யூடியூப் சேனல்களின் கருத்துக் கேட்பு என்பது கொஞ்சம் சமூகம் நோக்கியும் பயணித்தது. நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில்களும் ஆரோக்கியமான முறையிலேயே இருந்து வந்தது.

 

nn

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று வருடங்களாக சில யூடியூப் சேனல்களால் கருத்துக் கேட்பு என்பதே ஆபாசக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது . கடற்கரை, சுற்றுலாத் தலம் என பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் விரசமான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப்பதையே தற்பொழுது சில யூடியூப் சேனல்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் 'கண்டெண்ட்' எடுப்பது.

nn

இந்நிலையில் சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள வி.ஆர் மால் பகுதியில் மாலுக்கு வருவோர் போவோரிடம் 'வீரா டால்க்ஸ் டபுள் எக்ஸ்' என்ற யூடியூப் சேனல் சார்பாக அதன் தொகுப்பாளினி சுவேதா என்பவர் காதல் குறித்து கருத்து கேட்டுள்ளார். அப்பொழுது இளம்பெண் ஒருவரிடம் காதல் குறித்து கேட்டுள்ளனர். 'ஒளிபரப்பு செய்ய மாட்டோம் சும்மா ஜாலியா சொல்லுங்க' என கேட்டுள்ளனர். அப்பெண்ணும் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து தெரிவித்த கையேடு இதனை வெளியிட வேண்டாம் என நிபந்தனை விதித்துள்ளார். யூடியூப் சேனல் தரப்பும் வெளியிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு வெளியிட மாட்டோம் என உறுதியளித்த அந்த பேட்டியை யூட்யூப் நிர்வாகத்தினர் வெளியிட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சேனலில் வெளியான அந்த பேட்டி நீக்கப்பட்டது. இருப்பினும் பேட்டியை எடுத்த சுவேதா என்ற பெண் மற்றும் ஒளிப்பதிவாளர் யோகராஜ், அந்த சேனலின் உரிமையாளர் ராம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 'வீரா டால்க்ஸ் டபுள் எக்ஸ்' ஏற்கனவே இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச கண்டெண்ட்கள் கொண்ட பேட்டிகளை  வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.