
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் வசித்து வருபவர் திவ்யா(36). இவர் கடந்த 24 ஆம் தேதி வேலூரில் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டு சிதம்பரம் பேருந்தில் திருக்கோவிலூர் நோக்கி வீடு திரும்பியுள்ளார். அப்போது திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் பேருந்தில் இருந்து இறங்கிய திவ்யா தனது கைப்பையில் வைத்திருந்த பர்சை பார்த்தபோது கைப்யையில் இருந்து பர்ஸ் காணாமல் போயுள்ளது. இதனை அடுத்து அருகாமையில் இருந்த பெண் மீது சந்தேகம் அடைந்து அங்கே விசாரித்த போது அந்த பெண் வேறொரு பேருந்தில் மாரி சென்று விட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து திவ்யா(36) திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருக்கோவிலூர் டிஎஸ்பி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளி குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதே பாணியில் தொடர் திருட்டில் ஈடுபடும் நபர் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் அங்கு மறைந்திருந்த கவிதா என்கிற பேச்சியம்மாளை(33) பிடித்து திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர் பகுதியைச் சேர்ந்த நபர் கவிதா என்கிற பேச்சியம்மாள் என்பதும், திவ்யாவின் அருகாமையில் அமர்ந்து அவர் கைப்பையில் இருந்த பர்ஸையும் அதில் இருந்த இரண்டு சவரன் தங்க நகை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடியதையும் ஒப்புக்கொண்டு உள்ளார். இதனை அடுத்து கவிதாவை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து நகையை விற்பனை செய்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
கவிதாவின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் இது போன்று தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.