Skip to main content

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார். 

சார்ந்த செய்திகள்