
தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை நேரத்தில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது மதியம் மேகமூட்டம் சேர்ந்து சாரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, தொட்டகாஜனூர், சிக்கள்ளி, மல்குத்திபுரம், கோடிபுரம், திகனாரை, ஏரகனள்ளி மற்றும் வனப்பகுதியில் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
பலத்த மழையால் மீண்டும் மல்குத்திபுரம் அருகே உள்ள திம்மையன் குளம் நிரம்பி உபரி நீர் வெளியானதால் அங்குள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒருசில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தை கடந்து சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு வெள்ளம் வடிந்த பிறகு போக்குவரத்து சீரானது. அதேபோல் களரவாடி கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக மின் கம்பத்தில் இருந்து சாந்தம்மா என்பவரது வீட்டிற்குச் செல்லும் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் அவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த மழையால் குளம் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது.