
ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் இன்று (19/05/2025) ஐ.ஜி செந்தில்குமார் சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்தமேகரையான் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராமசாமி-பாக்கியம்மாள் கொலை செய்து 11 நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. பழம் குற்றவாளிகள் , சிசிடிவி போன்றவை கொண்டு விசாரணை நடத்தி வந்தோம்.
கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ்,மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. கொலை உண்ட தம்பதிகளின் செல்போன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், மரக்கட்டை கையுறை, போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. ராமசாமி செல்போன் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை சம்பவம் நடந்த இடங்களில் பதிவான கால் தடங்கலும், இவர்களின் கால் தடங்கலும் ஒத்துப் போய் உள்ளது. கொலை சம்பவம் முன்பு 15 நாட்கள் நோட்டமிட்டது தெரியவந்தது. இவர்கள் கொள்ளையடித்த நகையை அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரிடம் கொடுத்துள்ளார். அவர் அதனை உருக்கி 82 கிராம் வைத்திருந்தார். அந்த நகையும் பறிமுதல் செய்துள்ளோம். இதையடுத்து ஞானசேகரையும் 4-வது நபராக கைது செய்துள்ளோம்.

மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம், சேமலைகவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (44) ஆகியோரை இதே பாணியில் கொலை செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகையை கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டனர். மேலும் கொலையுண்டவர்களின் செல்போன் வைத்திருந்தனர். அதையும் பறிமுதல் செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடியிடம் உள்ளது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுகுறித்த ஆதாரங்களை திரட்டி வருகிறோம். விசாரணை முடிவில் முழுமையான தகவல் வெளிவரும். இவர்கள் 2015 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதாகி 9 மாதங்கள் சிறையில் இருந்து தெரியவந்துள்ளது. ஆச்சியப்பன் தேங்காய் உரிப்பது போன்று தோட்ட வீடுகளை நோட்டமிட்டு அதில் தனியாக வசிக்கும் தம்பதிகளை தேர்ந்தெடுத்து கூட்டாளிகளுடன் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் எதுவும் எடுக்கவில்லை. 82 கிராம் தங்க நகை மட்டுமே மீட்டுள்ளோம். கடந்த 28ம் தேதி இரவு 12 மணியளவில் இவர்கள் மூவரும் ராமசாமி பாக்கியம்மாளை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். கைதான் அவர்கள் மீது ஈரோடு திருப்பூர் கோவை உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது நான்கு பேரும் கைது செய்யப்பட்டு எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வரும் இரண்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் நடக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களிடம் மேலும் பல வழக்கு தொடர்பாக விசாரிக்க உள்ளதால் நீதிமன்ற அனுமதியுடன் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்' இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது டி.ஐ.ஜி சசிகுமார், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, ஏடிஎஸ்பி விவேகானந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.