மக்களிடம் கருத்துக் கேட்பது என்பது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால் கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஆபாசத்தைத் திணித்து அதன் மூலம் பணம் ஈட்ட நினைக்கும் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த மூன்று பேரின் கைது.
யூடியூப் என்ற ஒன்று அதிகம் அறியப்படாத ஆரம்ப காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த மக்களின் விமர்சனங்களைப் பெறுவதற்காக யூடியூப் சேனல்கள் தியேட்டர் வாசலை நோக்கி படையெடுக்கும். வெளியான திரைப்படம் குறித்து ரசிகர்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர். இப்படி இருந்த நிலையில் யூடியூப் சேனல்களின் கருத்துக் கேட்பு என்பது கொஞ்சம் சமூகம் நோக்கியும் பயணித்தது. நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், முக்கிய நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் ஆரோக்கியமான கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில்களும் ஆரோக்கியமான முறையிலேயே இருந்து வந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று வருடங்களாக சில யூடியூப் சேனல்களால் கருத்துக் கேட்பு என்பதே ஆபாசக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது . கடற்கரை, சுற்றுலாத் தலம் என பொது இடங்களில் பெண்கள், இளைஞர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் விரசமான கேள்விகளைக் கேட்டு அதற்கு ஆபாசமான பதில்களைப் பெற முயற்சிப்பதையே தற்பொழுது சில யூடியூப் சேனல்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் 'கண்டெண்ட்' எடுப்பது.
இந்நிலையில் சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள வி.ஆர் மால் பகுதியில் மாலுக்கு வருவோர் போவோரிடம் 'வீரா டால்க்ஸ் டபுள் எக்ஸ்' என்ற யூடியூப் சேனல் சார்பாக அதன் தொகுப்பாளினி சுவேதா என்பவர் காதல் குறித்து கருத்து கேட்டுள்ளார். அப்பொழுது இளம்பெண் ஒருவரிடம் காதல் குறித்து கேட்டுள்ளனர். 'ஒளிபரப்பு செய்ய மாட்டோம் சும்மா ஜாலியா சொல்லுங்க' என கேட்டுள்ளனர். அப்பெண்ணும் தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து தெரிவித்த கையேடு இதனை வெளியிட வேண்டாம் என நிபந்தனை விதித்துள்ளார். யூடியூப் சேனல் தரப்பும் வெளியிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 7 மாதங்களுக்குப் பிறகு வெளியிட மாட்டோம் என உறுதியளித்த அந்த பேட்டியை யூட்யூப் நிர்வாகத்தினர் வெளியிட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இது குறித்து கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த சேனலில் வெளியான அந்த பேட்டி நீக்கப்பட்டது. இருப்பினும் பேட்டியை எடுத்த சுவேதா என்ற பெண் மற்றும் ஒளிப்பதிவாளர் யோகராஜ், அந்த சேனலின் உரிமையாளர் ராம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 'வீரா டால்க்ஸ் டபுள் எக்ஸ்' ஏற்கனவே இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச கண்டெண்ட்கள் கொண்ட பேட்டிகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.