
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவதோடு, டாஸ்மாக் துறையின் முக்கிய அலுவலர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று இரண்டு அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. டாஸ்மாக்கின் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் இன்று நான்கு மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். எட்டாவது முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல டாஸ்மாக் துறையின் மூத்த மண்டல மேலாளராக பணிபுரிந்த சுமன் என்பவரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த காலகட்டத்தில் பொறுப்பிலிருந்து மூத்த மண்டல மேலாளர் சுமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. டாஸ்மாக் கடைகளுக்காக கொள்முதல் செய்யப்பட்ட மதுபானங்களில் இருந்து சிசிடிவி கேமரா வரை பொருட்கள் அனைத்தையும் விற்பனை மற்றும் கொள்முதல் செய்தவர் ஜோதி சங்கர் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.