Skip to main content

புயல் பாதிப்பால் 200 ஆடுகள் பலி!! பறிகொடுத்த விவசாயி அதிர்ச்சியில் மரணம்!!

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராசேந்திரன் (வயது 60). பல ஆண்டுகளாக செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தார். கடந்த மாதம் வரை சுமார் 300 ஆடுகள் அவரிடம் இருந்துள்ளது. ஆடுகளை அவரும் அவரது மனைவியும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலையில் அதே பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் முன்பு கிடை அமைத்து அடைத்து வைத்துள்ளனர். 

 

kaja


    
நவம்பர் 15 ந் தேதியும் வழக்கம் போல ஆடுகளை கிடையில் அடைத்துவிட்டு சிறு குட்டிகளை கூடையில் அடைத்து வைத்து விட்டு அதன் அருகில் கட்டிலில் தூங்கியுள்ளார். 16 ந் தேதி அதிகாலை வீசிய கடும் புயல் காற்றில் கட்டில் கீழே தள்ளப்பட்டதுடன் ஆடுகளும் காற்றிலும் மழையிலும் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த கூடைகளும் தூக்கி வீசப்பட்டு குட்டிகளும் தண்ணீரில் மிதந்து சென்றுள்ளது. புயல் குறைந்த பிறகு 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை காணவில்லை. மேற்பனைக்காடு மற்றும் வேம்பங்குடி பகுதியில் உள்ள குளங்களில் ஆடுகள் செத்து மிதந்துள்ளது. உடனே கால்நடை மருத்தவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் 126 ஆடுகள் இறந்து கிடந்ததை பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு புயல் தாக்கியதில் பாதிக்கப்பட்டிருந்த ஆடுகள் தொடந்து ஒவ்வொரு நாளும் 10, 5 என்று பலியாகிக் கொண்டே இருந்துள்ளது. மொத்தம் இது வரை 200 ஆடுகளுக்கு மேல் பலியாகி உள்ளது.

 

kaja


    
இந்த நிலையில் திங்கள் கிழமை மாலை ஆடுகளை மேய்த்துவிட்டு கிடைக்கு கொண்டு வந்த போது சில ஆடுகள் இறந்துவிட்டததை தூக்கி புதைத்துவிட்டு இரவில் ஆடுகளுக்கு பாதுகாப்பாக கிடையில் படுத்துள்ளார். அப்போது சில ஆடுகள் இறந்துள்ளது அந்த ஆடுகளை அருகில் தூக்கி போட்டுவிட்டு படுத்தவர் அதிர்ச்சியிலேயே மரணமடைந்துவிட்டார். நள்ளிரவில் அந்த பகுதி கோயிலில் தங்கி இருந்தவர்கள் பனி அதிகமாக உள்ளது என்று அவரை அருகில் உள்ள மேடையில் படுக்கச் சொல்லி எழுப்பியபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. உடனே அவரது வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அவரது உறவினர்கள் ராஜேந்திரன் உடலை வீட்டிற்று தூக்கிச் சென்றனர்.

 

kaja


    
இது குறித்து அவரது மகன் பாண்டியராஜன் கூறும் போது.. வழக்கமாக ஆடுகள் வளர்த்து வருகிறோம். புயல் அன்று 200 க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்துச் சென்றுவிட்டது. அதில் 126 ஆடுகள் இறந்துள்ளதை பார்த்து பதிவு செய்தோம். அதன் பிறகு புயல் தாக்கி பாதிக்கப்பட்ட பல சினை ஆடுகள் குட்டிகளை குறைந்த நாட்களில் போட்டது. அந்த குட்டிகளும், ஆடுகளும் இறந்தது. அதேபோல ஒவ்வொரு நாளும் 10 ஆடுகளும், 5 ஆடுகள் என்று இறந்து வருகிறது. திங்கள் கிழமையும் பல ஆடுகள் இறந்து. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் ஆட்டுக்கிடையில் படுக்கையிலேயே இறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு செவ்வாய் கிழமையும் 5 ஆடுகள் இறந்துவிட்டது. இன்னும் 50 ஆடுகள் தான் நிற்கிறது. அதிலும் பல ஆடுகள் பாதிக்கப்பட்டு நிற்கிறது. கால்நடை மருத்தவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும் தினசரி ஆடுகள் இறந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் எங்களுக்கு வழங்கவில்லை என்றார்.
    


ராஜேந்திரன் இறந்த தகவல் அறிந்து அஞ்சலி செலுத்த வந்திருந்த அவரது உறவினர்கள் கூறும் போது.. புயல் பாதிப்பால் 200 ஆடுகளுக்கு மேல் பறிகொடுத்து தற்போது அவரும் அதே அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். அதனால் இறந்த ஆடுகளுக்கும் ஆடு வளர்த்து அதனால் அதிர்ச்சியில் மரணமடைந்த ராஜேந்திரன் குடும்பத்திற்கும் புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்