Skip to main content

ப.சிதம்பரம் உறவினர் என கூறி அரசு வங்கியில் ரூ.15 கோடி மோசடி செய்த தொழில் அதிபர் தலைமறைவு!

Published on 08/07/2018 | Edited on 08/07/2018
banking-Fraud-Opt


ப.சிதம்பரத்தின் உறவினர் எனக்கூறி 15 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் மீதும், அவருக்கு கடன் வழங்கிய வங்கி மேலாளர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிந்துள்ளது. மேலும், தொழிலதிபரின் வீடு, அலுவலகத்துக்கு சி.பி.ஐ. சீல் வைத்தது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி வால்சம் சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக சிவக்குமார் பணியாற்றி வந்தார். இவர், ஊட்டியை சேர்ந்த ராஜன் என்பவருக்கு சொந்தமான குரோவின் புளோரிடெக் நிறுவனத்துக்கு மலர் சாகுபடி செய்ய 15 கோடி கடன் வழங்கியுள்ளார். ராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர் என கூறி வந்துள்ளார்.

 

 

இந்த கடன் பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பது வங்கி உயர்அதிகாரிகளின் தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் மேலாளர் சிவக்குமார் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரித்தது. இதில், வங்கியில் ரூ.15 கோடி முறைகேடு நடைபெற்றதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விசாரணையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 58 விவசாயிகள் மலர் சாகுபடி செய்வதற்காக இந்த கடன் பெற்றதாக கணக்கு காட்டியுள்ளனர்.

மலர் சாகுபடி மேற்கொள்ள தேவையான பசுமை குடில், சொட்டு நீர் பாசன கருவிகள் என பல்வேறு பொருட்கள் வாங்குவதாகவும், 58 விவசாயிகளின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மலர் சாகுபடி செய்ய கடன் பெற்றுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்டுள்ள முகவரியில் பசுமை குடில் அமைத்ததற்கான தடயங்கள் இல்லாததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கியில் கடன் பெற்ற ராஜன் மீதும் வழக்கு பதிந்து, அவருக்கு சொந்தமான ஊட்டியில் உள்ள வீடு மற்றும் குன்னூரில் உள்ள வீடு, அலுவலகம் ஆகியவற்றுக்கு நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் `சீல்’ வைத்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணைக்கு சென்றபோது ‘நான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர்’ என பொய் கூறி மிரட்டியுள்ளார். இதனால், அதிகாரிகள் இந்த கட்டிடத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதையடுத்து தான் கட்டிடத்துக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

இந்தநிலையில், மோசடி செய்த தொழில் அதிபர் ராஜன் கோவை உள்ளிட்ட பல இடங்களில் வங்கிகளில் பலகோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சீல் வைக்கப்பட்ட தகவலை அடுத்து ராஜன் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

சார்ந்த செய்திகள்