
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தெலுங்கானா மாநிலம் சேரளபள்ளி பகுதியிலிருந்து இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் (ஏப்.24) இரவு சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயிலில் சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் உத்தரவின் பேரில் ரயில்வே போலீசார் ரயிலில் பின்பக்கம் உள்ள பொதுபெட்டியில் சோதனை செய்தனர்.
சோதனையில் ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சாக்கு பையை சோதனை செய்தனர். அதில் சுமார் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. சிதம்பரம் ரயில்வே போலீசார் அதனை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக சோதனை ஈடுபட்டபோது 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்று சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தெரிவித்தார்.