இன்று செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா அறிவித்தது. தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும் கூட தற்கொலை முடிவுகள், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, இப்படி பல காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்கள் இளைஞர்கள். இப்படியான தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம். இந்த தினத்தை விழிப்புணர்வுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட, பலர் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கே முன் மாதிரியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சிகளை நடத்தினார். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலை 11 மணிக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்கள், பொதுமக்கள் இணைந்து தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தற்கொலைகளை தடுக்க விளக்கு ஏற்றும் விதமாகவும், மெழுகுவர்த்தி ஏற்றி தற்கொலைகளை தடுப்போம், விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தற்கொலை எண்ணங்களை தடுக்கவும், தற்கொலை முயற்சி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை மீண்டும் இந்த முயற்சியில் இருந்து தடுத்து மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லவும், கடந்த மாதம் 104 என்ற இலவச ஆலோசனை சேவையை தொடங்கி வைத்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதன் மூலம் இப்படியான எண்ணம் உள்ளவர்கள் இலவச அழைப்பில் அழைத்துப் பேசினால் அவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

அதே போல மனநல வியாழன் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக கிராமங்கள் தோறும் சமூக அக்கரை கொண்ட இளைஞர்களை குழுவாக அமைத்து, அவர்கள் மூலம் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. தோல்விகளை கண்டு தவறான முடிவுகளுக்கு போகாமல் இருந்தாலே தற்கொலைகள் தடுக்கப்படும்.