Skip to main content

பொங்கல் பண்டிகை; ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Pongal festival Train ticket booking has started

 

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

 

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி போகிப் பண்டிகையும், 15ஆம் தேதி தைப்பொங்கலும், ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கலும், ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ரயில்வே துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. ரயில் டிக்கெட்களை ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையதளத்திலும், ரயில்நிலைய டிக்கெட் கவுண்டர்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

 

அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதே போல் ஜனவரி 12 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் நாளை முதல் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி 13 ஆம் தேதி பயணம் செய்பவர்கள், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் ஜனவரி 14 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 15 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதலும், ஜனவரி 16 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி முதலும் ஜனவரி 17 ஆம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதலும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மயிலாடுதுறைக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Chief Minister MK Stalin left for Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் தோட்டம் பால்பண்ணை என்ற பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (04.03.2024) காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணியளவில் திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இன்று இரவு 8.15 மணியளவில் சீர்காழி ரயில் நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று இரவு ஓய்வெடுக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு கார் மூலம் மயிலாடுதுறை சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்வை முடித்துவிட்டு மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதல்வரின் இந்த ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.