
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அப்போது அந்த மர்ம கும்பல் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் சாதீய ரீதியாக இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்ப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அதே சமயம் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அதோடு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் சின்னதுரை கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள வசந்தம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சின்னத்துரை சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையர் சாந்தாராம், உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சின்னத்துரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மொபைல் செயலி மூலம் பேசியவர்கள் நேரில் சந்திக்க வரும்படி அவரை அழைத்துள்ளனர். அதன்படி சின்னத்துரை அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.