
கோப்புப்படம்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த முத்தூர் ரோடு திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). இவர் அதேபகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தனது செல்போன் மூலம் பார்க்கும்படி தொழில்நுட்பம் மூலம் அதற்கான வசதியும் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இரவு 11 மணி அளவில் செல்போனை பார்த்த போது மளிகை கடையில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து பொருட்களை திருடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ராஜேந்திரன் அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றார். அப்போது கடையின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர் பொருட்களை திருடிக் கொண்டிருந்தார்.
ராஜேந்திரனை கண்டதும் அந்த நபர் தப்ப முயன்றார். அந்த நபரை ராஜேந்திரன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மடக்கி பிடித்தார். அந்த நபரை சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் திருச்சி மாவட்டம் கருப்பூர் அடுத்த அழகு கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (45) என்பது தெரிய வந்தது. அவர் கடையிலிருந்து பீடி, சிகரெட் பண்டல்களை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா உதவி உடன் திருடனை உரிமையாளர் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் இதே சிவகிரி பகுதியில் வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி தொடர் விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.