
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ளது ஒடுக்கத்தூர் என்ற கிராமம். இந்த கிராமத்திற்கு உட்பட்டது ஏரியூர் ஆகும். இந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் - ஜெயந்தி என்ற தம்பதியினருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. இந்நிலையில் மனோஜ் என்ற ஆறு மாத ஆண் குழந்தைக்கு கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் இன்று (11.04.2025) மாலை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இந்த அறிவுறுத்தின்படி இன்று இரவு சுமார் 7 மணியளவில் குடியாத்தத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றும் குழாய்யை பொறுத்த 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஊசியால் குத்தியதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக குழ்ந்தையின் கழுத்து உட்பட பல்பேறு இடங்களில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சற்று நேரத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் மருத்துவமனையின் கவனக்குறைவே குழுந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர், உறவினர்கள் குற்றம்சாட்டி மருத்துவத்துறையினர், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்