Skip to main content

கரூர் மாணவி விவகாரம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள்!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள், வெண்ணைமலை அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 19.11.2021 அன்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய அவர், திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக் கண்டு துடிதுடித்துப் போன அவரது தாய், உடனடியாக வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த தகவலின் பேரில், அங்கு விரைந்து வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார், அந்த மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வு செய்வதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், கோவை சம்பவத்தைப் போலவே இந்த மாணவியும் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவி எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் 'பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவ எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்த வகையில், கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக இன்று (24.11.2021) கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 மாணவர்கள் அரசு கலைக் கல்லூரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன கோஷங்கள் முழங்க பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்