Skip to main content

கிருஷ்ணகிரி: காப்புக்காட்டில் பயங்கர தீ! 3 கி.மீ. வனப்பரப்பு நாசம்!!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் பல்வேறு விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. கோடைக்காலம் என்பதால் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனத்தில் உள்ள மரங்கள் பட்டுப்போய் இருப்பதோடு, புல் பூண்டுகளும் காய்ந்து சருகாக மாறியுள்ளன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக வனத்துறை பலமுறை எச்சரித்துள்ளது.
 

krishnagiri forest area incident


இந்நிலையில், கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொகரப்பள்ளி காப்புக்காட்டில் வியாழக்கிழமை (ஏப். 16) திடீரென்று பயங்கர தீ ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மூன்று கி.மீ. தூரம் வரை பரவியது. 

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 5 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை விடிந்த பிறகும்கூட தீயணைக்கும் பணிகள் தொடர்ந்தன. இந்தக் காட்டுத்தீயில், தொகரப்பள்ளி காப்புக்காட்டில் மூன்று கி.மீ. பரப்பளவிலான வனப்பகுதி சாம்பலானது. 

 

சார்ந்த செய்திகள்