
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி (07.03.2025) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. அப்போது மக்ஃரிப் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகை முடிந்ததும் அக்கட்சியின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெற்றது. இதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இஸ்லாமியர்களோடு கலந்துகொண்டார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், “எனது அன்பான, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையைப் பின்பற்றி மனிதநேயத்திற்கும் சகோதரத்திற்கும் பின்பற்றி இங்கு உள்ள அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் என்னுடைய இந்த அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டது நீங்கள் எல்லோரும் இங்கு வந்து கலந்துகொண்டதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி (THANK YOU)” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சகாபுதீன் ரஸ்வி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திரைப்படங்களில் விஜய் இஸ்லாமியர்களை தீவிரவாதி போல சித்தரித்தவர் ஆவார். எனவே விஜய்யுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். அதோடு விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் இஸ்லாமியர்கள் அழைக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.