கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஊக்கப்படுத்தும் விதமாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார். அதில், "கரோனா தடுப்பு பணியின்போது தொற்று ஏற்பட்டு இறந்தால் ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். மருத்துவம், காவல்துறை, உள்ளாட்சித்துறை, தூய்மைப் பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் இறந்தால் ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும். கரோனா தடுப்பின் போது அரசு மற்றும் தனியார் பணியாளர் இறந்தால் பணியைப் பாராட்டி விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

கரோனா தடுப்பு பணியின் போது இறக்கும் மருத்துவர் உள்ளிட்டோர் உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படும். மருத்துவர் உள்ளிட்டோரின் உடல் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும். சென்னையில் செய்யப்படும் கரோனா பரிசோதனையைக் கணிசமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் நோய்த் தடுப்பு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகர கூடுதல் மண்டல அலுவலர்களாக கார்த்திகேயன் மற்றும் பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்." இவ்வாறு முதல்வர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.