
ஒரு காவல் ஆய்வாளருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டதை மாவட்டம் முழுக்க உள்ள போலீசார் வியந்து பேசுகிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கோபிநாத், என்பவர், சென்ற மாதம்தான் தாராபுரத்திலிருந்து மாறுதலாகி கருங்கல்பாளையம் வந்து பணியில் சேர்ந்தார். அடுத்த ஒரே வாரத்தில் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அட்மிட்டானார்.

ஒரு மாத சிகிச்சைக்குப் பின், குணமடைந்து இன்று காவல் நிலைய பணிக்குத் திரும்பினார். அப்போதுதான் இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டது. காவல் நிலைய வாயிலில் மேளதாளம் இசைக்க போலீசார் உற்சாக வரவேற்பளித்தனர். மலர் மாலைகள் மற்றும் சால்வை அணிவித்தும் பூங்கொத்துகள் கொடுத்தும் வரவேற்றதை அந்த இன்ஸ்பெக்டரே மிகவும் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
"கருங்கல்பாளையம் காவல் நிலையம் வருமானமுள்ள ஸ்டேஷனுங்க அப்புறம் வரவேற்பு பலமாகத்தானே இருக்குமுங்க..." என உற்சாகமாக கூறுகிறார்கள் மற்ற போலீஸ் ஸ்டேசன் போலீசார்.