Skip to main content

“உச்சநீதிமன்றம் விமர்சிக்கும் நிலையை ஆளுநர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது” - ராமதாஸ் வேதனை

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

"The House of Governors should not have caused the Supreme Court to criticize" - Ramadoss

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுவந்தது. அந்த வகையில் நேற்றும் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநரின் அதிகாரம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். 


அதில் அவர்கள் கூறியதாவது; பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். மாநில ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல முடியாது” என்று தெரிவித்தார்கள். 

 

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், “பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுநர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுநரின் நிலை; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது.

 

உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுநர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுநர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும். பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அது ஆளுநர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுநர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்