Skip to main content

முகூர்த்தம், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 03/06/2025 | Edited on 03/06/2025

 

Special buses to operate on the occasion of Muhurtham and Bakrid

முகூர்த்தம், பக்ரீத், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “05/06/2025 (வியாழக்கிழமை) 06/06/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 07/06/2025 (சனிக்கிழமை), மற்றும் 08/06/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந் திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 520 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. சனிக்கிழமை 550 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு, வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தலா 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்