
தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று (19-04-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழக மக்களின் அவுட் ஆஃப் கண்ட்ரோலாக (Out of control) முதல்வர் ஸ்டாலின் இன்னும் 11 மாதத்தில் போகப் போகிறார் என்பதை மிக பதற்றத்தோடு அவர் வெளிப்படுத்துகிறார். அ.தி.மு.க - பா.ஜ. க கூட்டணி அமைந்ததில் இருந்தே முதல்வர் ஸ்டாலின் மிகுந்த பதற்றத்தோடு காணப்படுகிறார். டெல்லிக்கு நீங்கள் அடிபணிய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. இலங்கையில் நம் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அடிபணிந்துதானே நீங்கள் அதை தடுக்காமல் இருந்தீர்கள். இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறீர்கள். 16 ஆண்டுகள் ஐந்து அமைச்சர்களோடு ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது டெல்லிக்கு அடிபணிந்துதானே அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தீர்கள்.
எதையும் கொண்டு வரவில்லை என்று வீரவசனம் எல்லாம் பேசலாம். இன்றைக்கு எந்த ஷாவும் ஒன்றும் செய்ய முடியாது என்று முதல்வர் பேசுகிறார். 1976இல் கே க ஷாவால் தான் இவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்கு ஒரு முறையும், தேச விரோதத்திற்கு ஒரு முறையும் இரண்டு முறை ஒரு ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது திமுக ஆட்சி தான். அதனால், புரிந்தும் புரியாதது மாறியும், தெரிந்தும் தெரியாதது மாறியும் பதற்றத்தில் பதற்றம் இல்லாததை மாறியும் இன்று முதலமைச்சர் மிகுந்த பதற்றத்தோடு இருக்கிறார். பதற்றம் வேண்டாம் முதலமைச்சர் அவர்களே, ஒரு 11 மாதம் பொறுத்திருங்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அதற்கு பின்பு என்னவெல்லாம் தமிழக மக்களுக்கு கொண்டு வர வேண்டுமோ அதையெல்லாம் கொண்டு வருவோம். எப்போதும் மோதல் போக்கு இருந்தால் எப்படி? நிதியை பற்றி பேசுகிறார்கள். ஏன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை? ஒரு மாநிலத்தின் நிதி கட்டமைப்பை முழுவதுமாக விவாதிப்பது தான் நிதி ஆயோக். அங்கு போகாமல் இருக்கிறார்கள்.
அதே மாதிரி, இன்று தமிழக மீனவர்களை பற்றி பேசுகிறீர்கள். தமிழக மீனவர்கள் பிரச்சனையும், இந்த இலங்கை மண் இந்தியாவிற்கு எதிராக செயல்படாது என்று இலங்கை அதிபரிடமிருந்து உறுதிப்பாட்டை வாங்கிவிட்டு வந்த பிரதமரை ஏன் வரவேற்கவில்லை?. முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை பார்த்தால் நேரடியாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் நடவடிக்கை பார்த்தது போலவே இருக்கிறது. மத்திய அரசே குறை கூறிகொண்டே இருந்தார். அதனால் முதலமைச்சர் பதற்றம் வேண்டாம், அமைதியாக இருங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் கூட்டணிக்குள் இருக்கும் குழப்பங்களை முதலில் பாருங்கள்” எனப் பேசினார்.