
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அரச்சலூர் சாலை அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (43). இவர் கடந்த 18ஆம் தேதி குடும்பத்துடன் அவரது காரில் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது சோமசுந்தரம் அவரது காரை வீட்டுக்கு அருகே உள்ள செட்டில் நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் சோமசுந்தரம் நேற்று முன்தினம் கார் செட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது கார் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சோமசுந்தரம் சென்னிமலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 18ம் தேதி நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் வந்ததும் அதில் ஒருவர் காரை திருடி சென்றதும் தெரிய வந்தது. மேலும், அந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தியதில் அவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் என்ற விஜய ராஜா (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மதுரைக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த விஜயராஜனை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.