Skip to main content

பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு; திருச்சி நகைக் கடைகளிலும் சோதனை

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Ed raid also raided Trichy jewellery for tax evasion of crores of rupees

 

சென்னை சவுக்கார் பேட்டை பகுதியில் இயங்கி வரும் 6 பிரபல நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் அந்த நகைக் கடைகளுடன் வணிக ரீதியாகத் தொடர்பில் இருக்கும் நகைக் கடைகளில், இன்று அமலாக்கத்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், திருச்சி பெரிய கடை வீதி, சின்னக் கடை வீதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. அதில் உரிய ரசீது இல்லாமல், நகைகளை விற்பனை செய்வதும், வாங்குவதும், பெறப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் முறையான பராமரிப்பின்றி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து திருச்சியில் ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜுவல்லரி, விக்னேஷ் ஜுவல்லரி, சூர்யா ஜுவல்லரி, சக்ரா ஜெயின் ஜுவல்லரி என 4 பிரபல நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் என 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளும், 10க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

 

இந்த சோதனையில் நகைக் கடைகள் தங்கத்தை கட்டிகளாக மொத்தமாக வாங்கியதில் பல கோடி ரூபாய் மதிப்பில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. மேலும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.