
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து இன்று (23.05.2025) காலை ஒரு 11 மணி அளவில் புதுக்கோட்டைக்குத் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இத்தகைய சூழலில் தான் இந்த பேருந்து கணக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநர் பிரபுவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் உடனடியாக பேருந்தைச் சாலையோரமாக நிறுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர் அருகில் உள்ள கியர் பாக்ஸ் மீது மயங்கி விழுந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஓட்டுநர் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது சம்பவம் தொடர்பாகப் பேருந்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. அதே சமயம் நடத்துநர் துரிதமாகச் செயல்பட்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தினார். நடத்துநர் சமயோசிதமாகச் செயல்பட்டதால் பயணிகள் உயர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.