Skip to main content

தீபாவளி பண்டிகையையொட்டி கள்ளநோட்டுகளை புழகத்தில் விட திட்டமிட்ட கும்பல் கைது

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

 

கோவையில் தீபாவளி பண்டிகையை குறிவைத்து கள்ளநோட்டுகளை புழகத்தில் விடவும்,  பெண்கள் வயதானவர்களிடம் கள்ளநோட்டுகளை மாற்றவும் கள்ளநோட்டு கும்பல் திட்டமிட்டிருந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

Fraud gang



கோவை காந்திபார்க் பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருபவர் ஜான் ஜக்கோ. வழக்கம் போல் கடையை திறந்து விற்பனை செய்து வந்த நிலையில், இருவர் பத்து ரூபாய்க்கு பெவிஸ்டிக் வாங்கி அதற்கான பணமாக ரூ.100 கொடுத்துள்ளனர். 100 ரூபாய் தாள் கள்ளநோட்டாக இருக்குமா என்ற அச்சத்தில் சந்தேகமடைந்த கடைக்காரர் ஜான், அவர்களை கேட்டபோது இருவரும் அங்கிருந்து ஒடப்பார்த்துள்ளனர். 
 

அக்கம்பக்கத்தினர் உதவியால் தப்பி ஓட முயன்ற இருவரை பிடித்த ஜான், ஆர்.எஸ்.புரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பூபதி என்பது தெரியவந்தது. இருவரிடமிருந்து, ரூ.3100 மதிப்பிலான 31 நூறு ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 

தொடர்ந்து இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில்,  கோவை இடிகரையில் வசித்து வரும் தன்ராஜ் என்பவர் கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்தது தெரியவந்தது. தன்ராஜிடமிருந்து, பிரவீன், பூபதி மட்டுமின்றி கோவை கணபதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரும் கள்ளநோட்டுகளை பெற்று புழக்கத்தில் விட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தன்ராஜ் மற்றும் ரஞ்சித் இருவரையும் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் பெருமாள் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, 14 லட்சத்து 9 ஆயிரத்து 150 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும், கள்ளநோட்டுகளை அச்சடித்த இயந்திரம், இங்க் போன்றவற்றையும் தன்ராஜிடமிருந்து கைபற்றினர்.  
 

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தன்ராஜ் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி எலக்டீரிஷியன் பணி செய்து வருகிறார். கம்ப்யூட்டர் மூலமாக ஸ்கேன் செய்து பக்கவாக புதியதாக வெளீயிடப்பட்டுள்ள  ரூபாய் 20, 50, 100, 2000 மதிப்பிலான நோட்டுகளை பிரிண்டர் முறையில் தயாரித்து கொடுத்ததும், குறிப்பாக தீபாவளி பண்டிகையை குறிவைத்து கள்ளநோட்டுகளை புழகத்தில் விடவும், பெண்கள், வயதானவர்களிடம் கள்ளநோட்டுகளை மாற்றவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இருவருக்கு வலைவீசி உள்ளதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தன்ராஜ் மீது ஏற்கனவே  ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் கடந்தாண்டு கள்ளநோட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்