
அதிமுக எப்போது நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படை எண்ணம் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க.வை நினைக்காமல் யாரும் இருக்க முடியாது. இதனால் த.வெக.வினர் திமுகவை விமர்சித்து வருகின்றனர். தி.மு.க அதன் கொள்கையில் அடி பிரளாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கொள்கை பிடிப்புடன் உள்ளது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கொண்டு வந்த கொள்கைகளை பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டிற்கான நிதி பெறுவது, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றில் உரிமைகளை பெறுவதற்காக மத்திய அரசிடம் போராடி வருகிறோம். இது அரசியல் அல்ல; நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சரியான வழியில் திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டையனும் அடுத்தடுத்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க.வை அவர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களின் அடிப்படையான எண்ணம். சட்டமன்றத்தில் கூட எதிர்க்கட்சியினர் வருத்தம் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மதித்து செயல்பட்டு வருகிறார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். திமுக எப்போதும் எந்த கட்சியுடன் ரகசியமாக கூட்டணி வைத்தது இல்லை, பாஜகவுடன் கூட்டணி வைத்தது கூட கலைஞர் நேரடியாக வெளிப்படையாக அறிவித்துவிட்டுத் தான் மேற்கொண்டார். எப்போதும் ரகசியமாக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை, திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.