
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சிறப்பான செயல்திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளார்!
கடலூர் மாவட்டத்தில் கரோனா நோய் பரவலால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் வரை 1859 பேர்கள். நேற்று புதிதாக 59 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு மொத்தம் 1,917 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,415 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 38,503 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதில் 35,378 பேருக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1,208 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவராமல் உள்ளது. 307 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சந்திரசேகர சகாமுரி நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார். முதற்கட்டமாக நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய வீடுகள்தோறும் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களை முதல் நிலை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்துள்ளார். அவர்கள் மூலம் தன்னார்வலர்கள் வீடுகளில் சென்று விவரங்கள் சேகரிக்கும் பணியை 21-ஆம் தேதி முதல் துவங்கியுள்ளனர். இதில் தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் உட்பட 2500 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, சுவை இழப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் பற்றிய விவரங்கள்; மேலும் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் இருதய நோய் சிறுநீரக கோளாறுகள் போன்ற இணை நோய் உள்ளவர்களின் விபரங்களையும் சேகரித்து அளிப்பார்கள்.
இவர்கள் வீடுகளில் விபரம் சேகரிக்கும் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய நடைமுறைகள் குறித்து வட்டார அளவிலான விழிப்புணர்வு குழுவினரால் கடந்த 18ம் தேதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெற்ற கூட்டத்தில் விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
களப்பணியாளர்கள் தினசரி சேகரிக்கும் விவரங்களை ஊராட்சி அளவில் தயாரித்து அன்றைய தினமே ஊரக பகுதிகளில் ஊராட்சி தலைவரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். நகரங்களில் சுகாதார மேற்பார்வையாளர்கள் இமெயிலில் இடம் பெற்றுள்ள குழுவினரிடம் விவரங்களை தெரிவிக்க வேண்டும் வட்டார அளவிலான குழு மற்றும் நகராட்சி பேரூராட்சி அளவிலான குழுக்கள் சேகரித்த தகவல்களை உடனடியாக பரிசோதித்து தேவையான அடிப்படையில் முன்னுரிமை அளித்து சிறப்பு முகாம்கள் அமைத்து நடத்தப்படும். அந்த முகாமில் சளி, இருமல், தொண்டை வலி காய்ச்சல், தொண்டை கரகரப்பு மற்றும் சுவை திறன் இழப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் வருவோருக்கு அங்கேயே பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பயத்தை தவிர்க்கும் நோக்கத்திலும் நோய்ப் பரவலை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் சந்திரசேகர சகா முரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தொடர்ந்து சமூக இடைவெளி முகக் கவசம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.