அரசுப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்களில் மாணவிகள் பெயருடன் சாதி பெயரும் குறிப்பிடப்பட்டு டோக்கன்கள் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையும், பெற்றோர்கள் மற்றும் மாணவிகளிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் வருகை தந்து மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாணவிகளுக்கு வழங்க வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களில் மாணவிகளின் பெயருடன் அவர்களது சாதி பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட மாணவிகளும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது மாணவிகளிடையே சாதியப் பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்டக் கல்வித்துறை அதிகாரி புகழேந்தி தெரிவித்துள்ளார்.