தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் (14.07.2021) கோவை வழியாக பயணத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு, சென்னை வரும்வரை ஒவ்வொரு இடமாக வரவேற்பளிக்க தமிழ்நாடு பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி கோவையில் நேற்று முன்தினம் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். வரவேற்பின்போது பல இடங்களில் பட்டாசு வெடித்ததில் பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று அவர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேசிய அண்ணாமலை, ''அடுத்த 6 மாதத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். மீடியாக்களைக் கையில் எடுக்கலாம். அதைப்பற்றி இனி கவலைப்படாதீர்கள். காரணம் என்னவென்றால், தொடர்ந்து பொய்யான விஷயங்களை ஊடகங்கள் சொல்ல முடியாது. இத்தனைக்கும் முன்னாள் தலைவராக இருந்த முருகன், தற்போது இன்ஃபர்மேஷன் பிராட்காஸ்டிங் மினிஸ்டரியுடைய மினிஸ்டராக இருக்கிறார். எல்லா ஊடகங்களும் அவருக்கு கீழ்தான் வரப்போகிறது'' என்றார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மத்திய இணையமைச்சர் முருகனை வைத்துக்கொண்டு ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என பேசிய அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வலியுறுத்தியுள்ளார்.