
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா கலந்துகொண்டார்.
அதன்பிறகு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “தயவு செய்து மாணவரணியாவது நெற்றியில் இருந்து பொட்டை எடுங்கள்; அதற்காக சாமியே கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை. அன்புதான் கடவுள் என்று சொன்னாலும், மனிதனுக்கு மனிதன் இடையே காட்டும் இரக்க உணர்விலே தான் கடவுள் இருக்கின்றார் என்று சொன்னாலும், கள்ளமில்லா உள்ளம் அதுதான் கடவுளின் இல்லம் என்று சொன்னாலும், அண்ணா சொன்னதை போல் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள் என்று சொன்னாலும், அப்படிப்பட்ட கடவுளின் மீது நமக்கு ஒன்று கோபமில்லை.
பொட்டு வைத்துக் கொள்ளுங்கள் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் நீங்களும் பொட்டு வைத்து சிங்கியும் பொட்டு வைத்து, நீங்களும் கயிறு கட்டி சங்கியும் கயிறு கட்டினால் சங்கிக்கும், உங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சாமி கும்பிடுங்கள், பொற்றோர் விபூதி பூசி விட்டால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், திமுக வேட்டி கட்டியவுடன் அதை எல்லாம் அழித்துவிட்டு வெளியே வாருங்கள். கொள்கையில்லாமல் போனால் அந்த அரசியல் கட்சி அழிந்துவிடும். அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கட்சிதான் அதிமுக” என்றார்.