அகில இந்திய அளவில் அனைத்து மாநிலத்தில் இருந்து 30 இலட்சம் விவசாயிகள் ஒன்று திரண்டு பல்வேறு கோரிக்கையை முன்னிறுத்தி தலைநகர் டெல்லியில் 2018 நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். இந்தப் போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 350க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, அதன்மூலம் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
புயல் சேதத்தால் அழிந்துவிட்ட அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு விரைத்து வழங்க வேண்டும். 60 வயதடைந்த விவசாயிகளுக்கு மகன், மகள் இருந்தாலும், சொந்தமாக பட்டா நிலம் இருந்தாலும் மாத ஓய்வூதியம் ரூபாய் 5,000 வழங்க வேண்டும். அழிந்துவிட்ட பயிர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தியும், மத்திய அரசின் இழப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை கிடைக்காமல் உள்ளதை மத்திய அரசு விவசாயிகளுக்கு விரைந்து பெற்றுத்தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைத்து டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர்.