சென்னையில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருட்டு பேர்வழியை சிசிடிவி வழியாக சுமார் 150 கிலோமீட்டர் பயணித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றதாக சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உதவிஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளை நடைபெற்ற வீட்டின் வெளிப்பக்கத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்ததில் அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அவன் அங்கிருந்து வடபழனி சிக்னல் சென்றது, அங்கிருந்து மதுரவாயல் மேம்பாலம் வழியாக செங்கல்பட்டு சென்றது என அவனை தொடர்ந்து 150 கிலோமீட்டர் தூரம் சிசிடிவி காட்சிகளின் வழியாகவே போலீசார் அவனை பின்தொடர்ந்துள்ளனர்.
செங்கல்பட்டு சென்ற அவன் அங்கிருந்து விக்கரவாண்டி சென்று டூ வீலருக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து மீண்டும் திண்டிவனம் சென்ற அவன் ஆரோவில் வழியாக புதுச்சேரி நுழைவுவாயில் முன்னுள்ள வணிக வரி அலுவலகத்தை கடந்து ரஜீவகாந்தி சிலையை தாண்டி செல்ல அதற்குமேல் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் போலீசார் பார்வையிலிருந்து மறைந்தான். சுமார் 150 கிலோமீட்டர் தூரம் 60 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவனை பின்தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அவனை பல இடங்களில் தேடியும் அவனை பிடிக்கமுடியாததால் அவனது புகைப்படம் புதுச்சேரி போலீசாருக்கு தமிழக போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் நகைப்பறிப்பு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் ஒருவன் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் அவன்தான் தமிழக போலீசார் தேடும் கொள்ளையன் என புகைப்படத்தின் மூலம் அடையாளம் கண்டுகொண்ட புதுச்சேரி போலீசார் தமிழக போலிஸுக்கு தகவலளிக்க அங்கு சென்று அவனை கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் கொல்கத்தாவை சேர்ந்த ஜான்சன் தத் என்றும், சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாவலராக பணியாற்றிவன் எனவும் தெரியவந்தது. அவன் பணிபுரியும் இடங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்களை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
சுமார் 150 கிலோமீட்டர்கள் 60 சிசிடிவி கேமரா கண்கள் மூலம் பயணித்து இறுதியில் கொள்ளையன் சிக்கியிருப்பது தற்போதைய சூழலில் சிசிடிவி கேமராவின் அவசியத்தை உணர்த்தும் விதமாக உள்ளது.