
ஒடிசாவில் இருந்து கோவில்பட்டிக்கு ரயிலில் அதிகளவில் கஞ்சா கொண்டு வரப்பட்டு புதுக்கிராமம் பகுதியில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து அமோகமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக டி.எஸ்.பி. ஜெகநாதனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது, எஸ்.ஐ. செந்தில் வேல்முருகன், தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம், செஸ்லின் வினோத், கழுகாசல மூர்த்தி ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புதுக்கிராமம் பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை(24.5.2025) இரவு புதுக்கிராமம் பகுதிக்கு போலீசார் சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சிலர் தப்பி ஓடினர். கோவில்பட்டி காமராஜ் நகரை சேர்ந்த ராஜசேகர பாண்டி(32), கோபாலபுரத்தை சேர்ந்த கருப்பசாமி(33) மற்றும் ஜோதி நகரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட 3 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா சூட்கேஸில் கொண்டு வரப்பட்டு கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு ஒரு கி.மீ. முன்பாக ரயிலின் வேகம் படிப்படியாக குறைக்கப்படும் நேரத்தில் ரயிலில் வரும் முக்கிய புள்ளி கஞ்சா சூட்கேஸை ரயிலில் இருந்து லாவகமாக கீழே உருட்டி விடுவதும் அங்கே தயராக காத்திருக்கும் ஏஜெண்ட்கள் அதை கைப்பற்றி பைக் மூலம் புதுக்கிராமம் சுடுகாட்டு பகுதிக்கு கொண்டு வந்து அங்கு பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் புதுக்கிராமம் சுடுகாட்டு பகுதிக்கு சென்று அங்கு பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று பேரையும் கைது செய்து நேற்றிரவு(25.4.2025) சிறைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளியான குருவி குமுளி அருண்குமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் தொடர்புடைய நெட்வொர்க் பின்னணி குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி