
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்று (26-04-25) கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், கட்சிப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய என்.ஆனந்த், “இது தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி விழா. தமிழக வெற்றிக் கழகம் என்றாலே மற்ற கட்சிகளுக்கு பயம் இருக்கிறது. வாக்குச்சாவடி முகவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. வாக்குச்சாவடி முகவர்கள் தான், நம் வேட்பாளர்களை அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். முகவர்கள், மக்களை தினமும் சந்திக்க வேண்டும், அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிய வேண்டும். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதே நமது கடமை. அணித் தலைவருடன் இணைந்து செயல்பட வேண்டும். மக்களின் அலைப்பேசி எண்ணை பெற்று வாட்ஸ் அப் குழு அமைத்து குறைகளை தீர்க்க வேண்டும்.
ஒரு நபருக்கு 30 வாக்காளர்கள் என வாரவாரம் அவர்களை சந்தித்து பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனை என்றால் அந்த பிரச்சனைகளைத் தலைமைக்கு கூறுங்கள். ஒரு தொண்டனைக் கூட நம் கட்சி இழக்கக் கூடாது. 234 தொகுதிகளிலும் விஜய் வேட்பாளர் என கருத வேண்டும். 2026 வெற்றிக்கு பின் ஒவ்வொரு குடும்பத்தையும் நம் கட்சித் தலைவர் விஜய் பார்த்துக் கொள்வார்” எனப் பேசினார்.
2 நாள் நடைபெறும் இந்த கருத்தரங்கின் முதல் நாளில் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக ரீதியான 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், 2ஆம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.