Skip to main content

விஜய் பங்கேற்ற கருத்தரங்கு கூட்டத்தில் திடீரென தீ விபத்து!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

A sudden fire broke out at a seminar attended by Vijay

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்றும் (26.04.2025), நாளையும் (27.04.2025) என இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த 2 நாள் கருத்தரங்கில் முதல் நாளில் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக ரீதியான 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், 2ஆம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கருத்தரங்கு கூட்டத்தில் பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாகக் கோவை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி ஓய்வு எடுக்கச் சென்ற தனியார் விடுதி வரையில் திறந்தவெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர், விஜய் கருத்தரங்கு மேடைக்கு வந்து கலந்து கொண்டார். அப்போது, தொண்டர்கள் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் அவர்களை அமைதி காக்குமாறு கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அப்போது, மேடைக்கு பின்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விஜய் உள்பட மேடையில் இருந்தவர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். மின்கசிவு காரணமாக சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதால், உடனடியாக கட்சி நிர்வாகிகள் அந்த தீயை அணைத்தனர்.

சார்ந்த செய்திகள்