Skip to main content

“பிரச்சனையை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள்” - பஹல்காம் தாக்குதல் குறித்து ட்ரம்ப் கருத்து!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

 Trump has said that India and Pakistan will solve the problem themselves

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கும், தங்களுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் கூறினாலும், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில பயங்கரவாத அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. அந்த பயங்கரவாத அமைப்பை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது. 

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிப்ர் ட்ரம்ப், “இது அண்மைக் காலங்களில் ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலிலே இது மிக கொடூரமான தாக்குதல். நான் இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறேன். அதேபோன்று பாகிஸ்தானுடனும் நெருக்கமாக இருக்கிறேன். அவர்கள் காஷ்மீரில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இரு நாட்டுத் தலைவர்களையும் நான் அறிவேன். அவர்கள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை அவர்கள் ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ கண்டுபிடித்துவிடுவார்கள்.  இந்த பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்