Skip to main content

வேங்கை வயல் விவகாரம்; “சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்த வேண்டும்” - விஜய்!

Published on 26/01/2025 | Edited on 26/01/2025
Vijay says Vangaivayal issue A special investigation team should be appointed and investigate 

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் தான் தமிழக அரசு இந்த சம்பவத்தில், முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதில் முரளிராஜா வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு குரல் மாதிரி பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய 2 இளைஞர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 3 பேரிடமும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அறிவியல் பூர்வமான சாட்சிகள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இவர்களை சம்பந்தபட்ட நபர்களாக கருதியுள்ளனர்.

இந்நிலையில் வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக  அவர் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும். ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

Vijay says Vangaivayal issue A special investigation team should be appointed and investigate 

மத்திய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்