Skip to main content

அமெரிக்காவில் கொல்லப்பட்டால் மோடி வாய்திறப்பார்! - குஜராத் எம்.எல்.ஏ. காட்டம்

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

தூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்காதது குறித்து குஜராத் எம்.எல்.ஏ. அல்பேஷ் தாகூர் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

alpesh


தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளான மே 22ஆம் தேதியன்று, ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக நடந்துசென்றனர். அப்போது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது பொதுமக்களும் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தத் தாக்குதலின் போது காவல்துறையினர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமின்றி, காவல்துறையினரின் அத்துமீறல் காரணமாக தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

காவல்துறையினரின் இந்தத் தாக்குதல், மத்திய மாநில அரசுகளின் மவுனம் என நாடு முழுவதும் உள்ள பலரும் தூத்துக்குடி சம்பவம் குறித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி இதுவரை அதுகுறித்து இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதுகுறித்து குஜராத் மாநிலம் ரதன்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அல்பேஷ் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த நாட்டின் பிரதமர் மோடி அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். ஆனால், இந்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் 13 இந்தியர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது குறித்து இன்னமும் மவுனமாக இருக்கிறார். அவர் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சேலஞ்சுகளை ஏற்றுக்கொள்வார். ஆனால், சாமன்யர்களின் குரலைக் கண்டுகொள்ள மாட்டார்’ என பதிவிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்