Skip to main content

த.வெ.க. பூத் கமிட்டி கூட்டம்; முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கும் விஜய்!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

TVk Booth Committee meeting Vijay gives important instructions

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுகவில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ள ஏதுவாக ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் துணை முதல்வரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி இந்த குழுவினர் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே போன்று அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்றும் (26.04.2025), நாளையும் (27.04.2025) என இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக ரீதியான 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளதாகவும் கூறப்படுக்கிறது. 

சார்ந்த செய்திகள்