தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (28/03/2021) மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி பங்கேற்றார். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,திராவிட கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல; தமிழகத்தின் உரிமையை மீட்பதற்கான தேர்தல் இது. தமிழகம் மீதான ரசாயனம், கலாசார தாக்குதலை எதிர்கொள்ளும் ஆற்றல் தி.மு.க.வுக்குதான் உள்ளது. புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து கல்வியைப் பாழாக்கியுள்ளார்கள். எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் மக்களுடன் இருப்பவன் நான். 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டு காலம் பின்னோக்கிச் சென்றுள்ளது. தமிழகம் கேட்ட ஜி.எஸ்.டி. இழப்பீடு, புயல் நிதியை தராத பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தது ஏன்? மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நடந்த அனைத்து சம்பவங்களும் பா.ஜ.க.வின் சதி. தமிழகத்தில் கூட்டணி அமைந்தது போல, இந்திய அளவில் கூட்டணி அமையாததால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. இந்திய அளவில் கூட்டணி அமைவதை உறுதி செய்ய ராகுல் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ராகுல் காந்தி என்னை சகோதரர் என்றே அழைக்கச் சொல்வார்; அவர் என் சகோதரர்" எனத் தெரிவித்தார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.