திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் கலைஞர் மறைவை தொடர்ந்து, கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. கட்சித் தலைவர் பதவி மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். இதேபோல் முதன்மைச் செயலாளரான துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, கட்சியில் செயல்தலைவர் பதவி ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதன்மைச் செயலாளர் பதவி யாருக்கு? என்கிற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், இன்று கட்சியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் சட்ட விதி 17, பிரிவு 3-ன் படி திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்டிருப்பதாக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.