Skip to main content

கோடிக்கணக்கான பெண்களின் உணர்வை தமிழக அரசு மதிக்க வேண்டும்... மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020
tasmac shop



கோடிக்கணக்கான பெண்களின் உணர்வையும், அரசியல் கட்சிகளின் கருத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த உத்தரவுக்கு இன்று உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. மேலும், தமிழகத்தின் சமூக நிலைமையையும், பெண்களின் உணர்வையும் கணக்கில் எடுத்து வழங்கப்பட்டதாக இத்தீர்ப்பு அமையவில்லை.

இந்தியாவில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மதுபானக் கடைகள் திறப்பும்,  வியாபாரமும் நோய்த்தொற்றை நிச்சயமாக அதிகப்படுத்தும். தனிமனித விலகல் காற்றில் பறக்கவிடப்படும். இது காசு கொடுத்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

 

 


மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும், மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கும், மத்திய அரசோடு போராடுவதற்கும் முன்வராத தமிழக அரசு, ஏழைக் குடும்பங்களை சீரழித்து அரசு வருவாயை பெருக்கும் இந்தப் பிரச்சனைக்கு மட்டும் மின்னல் வேகத்தில் உச்சநீதிமன்றத்தை  அணுகியது. இது ஒருபுறம் இருக்க மாநில உரிமைகள் குறித்து கவலைப்படாமல் மோடி அரசுக்கு துதிபாடும் போக்கையும், ஏழை குடும்பங்களைப் பற்றி கிஞ்சிற்றும் அக்கறையின்றி சொற்ப நிவாரணத் தொகையையும் வழங்கிவிட்டு, தற்போது அதை மதுபான விற்பனை மூலம் பறித்துக் கொள்ளும் அநீதியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
 

 

இந்த நடவடிக்கையானது குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை உள்ளிட்ட  பெண்களுக்கு எதிரான பல்வேறு வகையான குற்றங்களை அதிகரிக்கும். ஏழைக் குடும்பங்களை மேலும் பட்டினியில் ஆழ்த்தும். ஏற்கனவே இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இந்திய மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டினியில் தள்ளப்படும் போக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கும், ஆழமாகும். மதுபான கடைகளில் வரும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் கட்டாயம் ஏற்படுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையின் கவனம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும், தேவையற்ற வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்தும்.
 

nakkheeran app



டாஸ்மாக் கடைகளில் கூடுதல் நெரிசலில் மக்கள் அங்கேயே நின்று குடிப்பதை   தடுப்பது சாத்தியமே அல்ல. டீக்கடைகளில் கூட பார்சல் மட்டும்தான் என்று எச்சரிக்கையாக அறிவிக்கும் அரசு, இதில் தாராளமாக இருப்பது பொருத்தமற்ற செயல் ஆகும்.


இச்சூழலில், தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் கிடைத்த உத்தரவாக இருந்தாலும், தமிழகத்தின் கள நிலைமையையும், கோடிக்கணக்கான பெண்களின் உணர்வையும், அரசியல் கட்சிகளின் கருத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது''. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூபாய் 252 கோடி! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

Tasmac collects Rs 252 crore in a single day!

 

தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

 

மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி, இன்று (01/05/2022) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று (30/04/2022) கடைகளில் மதுபாட்டில்களை வாங்கக் கூட்டம் அலைமோதியது. இதனால் தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக மதுரையில் ரூபாய் 54.89 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 52.28 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 49.78 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 48.67 கோடிக்கும், கோவையில் ரூபாய் 46.72 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

Next Story

சேலத்தில் திருட்டு டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூடல்!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Tasmac liquor stores closed in Salem

 

சேலம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 

 

சேலம் மாவட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே அரசின் அனுமதியுடன் பார் எனப்படும் மதுக்கூட வசதி உள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு மதுக்கூட வசதி இல்லை. இந்நிலையில் சேலம் மாநகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஏப். 28- ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அனுமதி பெறாத மதுக்கூடங்கள், அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாத மதுக்கூடங்கள் என மொத்தம் 12 மதுக்கூடங்கள் விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருவது தெரிய வந்தது. 

 

இந்த 12 மதுக்கூடங்களும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக மதுக்கூடங்களை நடத்தியதாக அவற்றின் உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.